×

திருஉத்தரகோசமங்கை கோயிலில் புதர்மண்டிய தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும்

*பக்தர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் : திருஉத்தரகோசமங்கை புகழ்பெற்ற வராஹி அம்மன் கோயில் தீர்த்த தெப்பக்குளம் உள்புறத்தில் நாணல் புற்களால் புதர் மண்டியும், சுற்றுச்சாலை சேதமடைந்தும் கிடப்பதால் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புல்லாணி ஒன்றியம், திருஉத்தரகோசமங்கை பஞ்சாயத்தில் பிரசித்திப்பெற்ற மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர்,மரகத நடராஜர் கோயில் வடக்கு பகுதியில் சுயம்பு மகா வராஹி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வழக்கமான நாட்கள் மட்டுமன்றி விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

உள் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள்,பக்தர்கள் மட்டுமன்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும் கோயில் அருகில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. வீட்டுவரி ரசீது பெறுதல் உள்ளிட்ட பஞ்சாயத்து உதவிகள் பெறவும், நூறுநாள் வேலை பார்க்கவும் உள்ளூர் மக்கள் வந்து செல்கின்றனர். வெளிப்புறத்தில் விவசாய நிலங்களும் உள்ளது.

மழை காலம் துவங்குவது முதல் அறுவடை காலம் வரை விவசாயிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இக்கோயில் முன்பாக சீதா தீர்த்த குளம் உள்ளது. இப்பகுதியில் வறட்சி ஏற்பட்டாலும் கூட இந்த தீர்த்தக்குளம் வற்றாது. இக்குளத்தின் சிறப்பு குறித்து 9ம் நூற்றாண்டை சேர்ந்த மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் வரகுணபாண்டியன் காலத்தை சேர்ந்தவரும், சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் சிவப்பெருமான் மீது திருவெம்பாவையில் பாடியுள்ளார்.

இதில் மங்களநாதர், மங்களேஸ்வரி, மாணிக்கவாசகர் நீராடியதாக ஐதீகம் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்குளத்தில் கிராமமக்கள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது, கையில் தண்ணீரை எடுத்து தலையில் தீர்த்தமாக தெளித்து செல்கின்றனர். மேலும் வராஹி அம்மனுக்கு அம்மியில் விரலி மஞ்சள் அறைத்து சாற்றப்படுவது வழக்கம். இதற்கு மஞ்சள் அறைப்பதற்காக அந்த தீர்த்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று இக்குளத்தில் மீன்களும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் குளத்தின் உள்பகுதி சுற்றிலும் நாணல் புற்கள் அடர்த்தியாக வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் விஷஜந்துகள் அடையும் அபாயம் உள்ளது.

மேலும் தண்ணீர் மாசடையும் சூழ்நிலை இருப்பதால் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குளத்து கரையின் நான்கு புறமும் வாகனங்கள் வந்து செல்ல சாலை அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மங்களநாதர் கோயிலில் மார்கழி மாதம் நடக்கக் கூடிய மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம் விழா, சித்திரை தேரோட்டம், திருக்கல்யாணம் போன்ற திருவிழா காலங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருகிறது. அப்போது வராஹி அம்மன் கோயில் தீர்த்த குளத்து கரை சாலையில் பார்க்கிங் வசதி செய்யப்படும்.

இத்தகைய நிலையில் அச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் வழக்கமான நாட்கள் மட்டுமின்றி விழா காலங்களில் வாகனங்கள் நிறுத்துவதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே குளத்து கரை உள்பகுதியில் வளர்ந்துள்ள புற்களை அகற்ற வேண்டும். இதுபோன்று சாலையையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருஉத்தரகோசமங்கை கோயிலில் புதர்மண்டிய தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Budharmandiya Theppakulam ,Thiruuttarakosamangai temple ,Ramanathapuram ,Thiruuttarakosamangai ,Varahi Amman temple ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...